சாமி ஸ்கொயர் திரை விமர்சனம்!

சாமி படத்தின் முடிவில் பெருமாள் பிச்சையான கோட்டா சீனிவாச ராவை ஆறுச்சாமியான விக்ரம் எரித்து கொன்று விடுவார். ஆனால் ஊரைப் பொறுத்தவரை பெருமாள் பிச்சை தலைமறைவு, போலீஸ் வலைவீச்சு என்று தான் முடிவு இருக்கும். அதன் தொடர்ச்சியாக சாமி ஸ்கொயர் படம் உருவாகி இருக்கிறது.

ஒருபுறத்தில் திருநெல்வேலியில் ரவுடிசத்தை ஒழித்துக்கட்டிய ஆறுச்சாமி, தனது மனைவி ஐஸ்வர்யா ராஜேசுடன் சொந்த ஊரான பழனிக்கு திரும்புகிறார். மறுபுறத்தில் பெருமாள் பிச்சையின் குடும்பத்தினர் இலங்கையில் வாழ்ந்து வருகின்றனர். பெருமாள் பிச்சைக்கு ஓ.ஏ.கே.சுந்தர், ஜான் விஜய் மற்றும் பாபி சிம்ஹா என மூன்று மகன்கள் உள்ளனர். போலீசுக்கு பயந்து தனது தந்தை தலைமறைவாகி விட்டதாக பாபி சிம்ஹா கிண்டல் செய்யப்படுகிறார்.

இதையடுத்து தனது அப்பா பற்றிய உண்மையை தெரிந்துகொள்ள திருநெல்வேலி வரும் பாபி சிம்ஹா திருநெல்வேலியையே அலறவிடுகிறார். திருநெல்வேலியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் அவர், ஆறுச்சாமிக்கும் – பெருமாள் பிச்சைக்கும் இடையே நடந்த மோதல் பற்றி தெரிந்து கொண்டு ஆறுச்சாமியை கொல்ல திட்டம் போடுகிறார். அதில் வெற்றியும் பெறுகிறார்.

அதேநேரத்தில் கர்ப்பம் தரித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது மகனை பெற்றெடுத்து விட்டு இறந்துவிடுகிறார். ராமசாமி என்னும் பெயரில் வளரும் அந்த குழந்தையை ஆறுச்சாமியின் மாமானாரான டெல்லி கணேஷ் டெல்லிக்கு எடுத்துச் சென்று விவேக்கின் குழந்தையாக வளர்க்கிறார்.

கலெக்டராக வேண்டும் என்ற கனவோடு வளரும் ராமசாமி, ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுகிறார். அதேநேரத்தில் மத்திய அமைச்சரான பிரபுவிடம் முக்கிய பொறுப்பிலும் பணியாற்றுகிறார். வெளிநாட்டில் படிப்பை முடித்துக் கொண்டு இந்தியா வரும் பிரபுவின் மகள் கீர்த்தி சுரேஷுக்கு விக்ரம் மீது காதல் வருகிறது.

இதற்கிடையே தேர்வில் வெற்றி பெறும் ராமசாமி, ஐ.பி.எஸ் ஆக தேர்வு செய்யப்பட்டு திருநெல்வேலி மாவட்டத்தின் துணை கண்காணிப்பாளராக தேர்வு செய்யப்படுகிறார். இந்த தகவல் அறிந்து அதிர்ச்சிக்குள்ளாகும் டெல்லி கணேஷ், ராமசாமிக்கு அந்த வேலை வேண்டாம் என்று நிர்பந்திக்கிறார்.

கடைசியில், ராமசாமி திருநெல்வேலிக்கு சென்றாரா? தனது அப்பா ஆறுச்சாமியின் வேட்டையை தொடர்ந்தாரா? ஆறுச்சாமியை பழிவாங்கியவர்களை பழிதீர்த்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

அப்பா, மகன் என இரு கெட்-அப்களில் விக்ரம் ஆறுசாமியாகவும், ராமசாமியாகவும் திருநெல்வேலி, பழனி, டெல்லி என கலக்கியிருக்கிறார். ஆறுச்சாமி கதாபாத்திரத்தில் பழைய விக்ரமை பார்க்க முடிகிறது. ராமசாமி கதாபாத்திரத்தில் முறுக்கு மீசையுடன் தற்போதைய காலகட்டத்துக்கு ஏற்ற போலீசாக விக்ரம் வலம் வருகிறார். மாடர்ன் பெண்ணாக கீர்த்தி சுரேஷ் அழகு தேவதையாக வலம் வருகிறார். முதல் பாதியை ஐஸ்வர்யா ராஜேஷும், இரண்டாவது பாதியை கீர்த்தி சுரேஷும் நன்றாகவே பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.

பாபி சிம்ஹா பார்வையாலேயே மிரட்டுகிறார். இளமையான மற்றும் வயதான தோற்றத்தில் பாபி மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சூரி தனது காமெடியால் ஓரளவுக்கு ரசிக்க வைத்திருக்கிறார். ஜான் விஜய், ஓ.ஏ.கே.சுந்தர், பிரபு, டெல்லி கணேஷ், உமா ரியாஸ், ரமேஷ் கண்ணா என மற்ற கதாபாத்திரங்களும் படத்தின் ஓட்டத்துக்கு துணையாக நிற்கின்றனர்.

பெருமாள் பிச்சை – ஆறுச்சாமி, இந்த இரு குடும்பத்திற்கும் இடையே நடக்கும் பழிவாங்குதலையே படமாக இயக்கியிருக்கிறார் ஹரி. தனது பாணியில், அதிரடி, காதல், காமெடி, சென்டிமெண்ட் என அனைத்தும் கலந்த கலவையாக திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார். படத்தின் தொடர்ச்சியை உருவாக்குவது எளிதல்ல, அதை சாமர்த்தியமாகவே கையாண்டிருக்கிறார்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக இருக்கிறது. பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். ப்ரியன், வெங்கடேஷ் அங்குராஜ் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

மொத்தத்தில் `சாமி ஸ்கொயர்’ டபுள் ட்ரீட். #SaamySquareReview #Vikram #KeerthySuresh

– நன்றி மாலைமலர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *