முக்கிய செய்திகள்
Home / சினிமா / பாலாவின் நாச்சியார் திரை விமர்சனம்

பாலாவின் நாச்சியார் திரை விமர்சனம்

பாலா படம் என்றாலே கொஞ்சம் கூட யோசிக்காமல் திரையரங்கிற்கு செல்லும் ஒரு கூட்டம். ஆனால், அந்த கூட்டத்தையே ஒரு நொடி யோசிக்க வைத்துவிட்டது தாரை தப்பட்டை. மீண்டும் தன் ரசிகர்களுக்கு ஒரு தரமான விருந்து கொடுக்க ஜோதிகா, ஜி. வி. பிரகாஷ் என யாரும் எதிர்ப்பார்க்காத கூட்டணியுடன் கைக்கோர்த்த பாலாவிற்கு வெற்றி கிடைத்ததா? பார்ப்போம்.

கதைக்களம்
படத்தின் முதல் காட்சியிலேயே இவானா(அறிமுகம்) கர்பணி பெண்ணாக இரயில்வே நிலையத்தில் நிற்கின்றார். அவரை ஒரு கும்பல் வலுக்கட்டாயமாக இழுத்து செல்ல, அவர்களிடமிருந்து ஜோதிகா அந்த பெண்ணை காப்பாற்றி விசாரணை செய்கின்றார்.

அதை தொடர்ந்து அந்த கர்ப்பத்திற்கு காரணம் ஜிவி தான் என்று அவரை கைது செய்து போலிஸ் விசாரிக்கின்றது. அவரும் தங்களுக்குள் ஏற்பட்ட காதலை ப்ளாஷ்பேக்காக சொல்கின்றார்.

பிறகு தான் ஓர் அதிர்ச்சி காத்திருக்கின்றது. அந்த குழந்தை ஜிவியுடையது இல்லை என்ற பிறகு யார் இந்த பெண்ணை ஏமாற்றினார்கள் என்பதை ஜோதிகா கண்டுப்பிடிப்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்
ஜோதிகா இதுவரை நடித்த அனைத்து படங்களிலும் டாப் 5 லிஸ்ட் எடுத்தால் நாச்சியார் கண்டிப்பாக இடம்பிடிக்கும். முதல் காட்சியிலேயே அடுத்தவர்கள் பைக்கில் இடித்ததற்கு தன் ட்ரைவரை திட்டி, இறங்கி அவர்களிடம் மன்னிப்பு கேட்கும் இடத்திலேயே ஜோதிகாவின் கதாபாத்திரத்தை அழுத்தமாக காட்டியுள்ளனர். அதிலும் அவர் ஒவ்வொருவரையும் விசாரிக்கும் காட்சி மிரட்டல்.

ஜிவிக்கு இது தான் முதல் படம் என்று சொல்லலாம், இதிலிருந்து தான் அவரின் ரியல் திரைப்பயணம் தொடங்கியுள்ளது. சென்னை இளைஞனை அப்படியே நம் கண் முன்னே கொண்டு வருகின்றார். இவானாவும் அத்தனை யதார்த்தமாக நடித்து அசத்தியுள்ளார், முதல் படம் போலவே தெரியவில்லை.

இதையெல்லாம் விட நாச்சியார் பாலா படம் போலவே தெரியவில்லை. எப்போதும் இரத்தம், வெட்டு, குத்து, கொடூர கிளைமேக்ஸ் என்பதில் இருந்து வெளியே வந்துள்ளார். அதற்கு பாராட்டுக்கள், கிளைமேக்ஸ் கொடூரம் என்றாலும் ஆடியன்ஸ் பார்வையில் விசில் பறக்கின்றது.

பாலா வசனத்தில் கிடைக்கின்ற கேப்பில் ஸ்கோர் செய்பவர். ‘அட சாமிக்கு போர் அடிக்கும்ல, அதனால் தான் இப்படி சோதனைகளை தருகின்றார், நாம வேனும்னா பிரஷ்ஷா ஒரு சாமிய உருவாக்கலாம்’ என்பது போல் படம் முழுவதும் வசனங்கள் கைத்தட்ட வைக்கின்றது.

ஆனால், படத்தின் முதல் பாதி ஜிவி-இவானா காதலே நிறைய வருவது போல் இருந்தது. இரண்டாம் பாதியில் இருந்து விறுவிறுப்பு கொஞ்சம் குறைவாக இருந்தது. மேலும், தீவிர பாலா ரசிகர்களுக்கு ‘இது பாலா படம் தானா’ என்று கேட்க வைத்துவிடும்.

ஈஸ்வரின் ஒளிப்பதிவு சென்னையின் குப்பைத் தொட்டியில் ஆரம்பித்து முட்டு சந்தை கூட அழகாக படம்பிடித்துள்ளது. படத்தின் மற்றொரு ஹீரோ இளையராஜா தான், டைட்டில் கார்டிலேயே மிரட்டியுள்ளார், ராஜாவின் ராஜாங்கம்.

க்ளாப்ஸ்
கதைக்களம், தற்போதுள்ள இளம் பெண்கள் எத்தனை கவனமாக இருக்க வேண்டும் என்பதை காட்டியுள்ளது.

பாலாவின் மாற்றம், இரண்டாம் பாதியின் விறுவிறுப்பு.

இளையராஜாவின் பின்னணி இசை.

பல்ப்ஸ்
படத்தின் முதல் பாதி கொஞ்சம் மெதுவாகவே நகர்கின்றது.

பாலா கமர்ஷியலில் இறங்கிவிட்டார் என்றாலும், கிளைமேக்ஸில் அப்படி ஒரு விஷயத்தை ஜோதிகா செய்யும் போது அதை யாருமே வீடியோ கூட எடுக்கவில்லை என்பது லாஜிக் மீறல்.

மொத்தத்தில் நாச்சியார் பாலாவின் அடுத்த இன்னிங்ஸின் முதல் வெற்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top