மிஸ்கின் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் “துப்பறிவாளன்” திரைவிமர்சனம்!

வின்சென்ட் அசோகன் பிறந்த நாள் அன்று அவரது மனைவி சிம்ரன் மற்றும் குழந்தைகளோடு கேக் வெட்டி கொண்டாடுகிறார்கள். அப்போது அவரது மகன் ஒரு பரிசு பொருள் கொடுக்கும் போது மின்னல் தாக்கி வின்சென்ட் அசோகனும், ஒரு மகனும் இறந்து விடுகிறார்கள்.

அதுபோல், போலீஸ் அதிகாரி ஆடுகளம் நரேனுக்கு பொது இடத்தில் ஒரு எறும்பு கடித்ததுபோல் உணர்கிறார். அதன்பின் நடக்கும் ஒரு மீட்டிங்கில் ஆடுகளம் நரேன் இறந்து விடுகிறார். இவர் இறப்பில் மர்மம் இருக்கிறது என்று போலீஸ் நம்புகிறது.

இது ஒருபுறம் இருக்க, எந்த கேஸ் கொடுத்தாலும் தன்னுடைய திறமையால் விரைவில் துப்பறிந்து விசாரிக்கிறார் தனியார் துப்பறிவாளர் விஷால். ஆனால், இவரது திறமைக்கு ஏற்றார்போல் ஒரு கேஸும் அமையாமல் இருக்கிறது. இந்நிலையில், சிறுவன் ஒருவன் என் நாய் குட்டியை யாரோ துப்பாக்கியால் சுட்டு விட்டார்கள் என்று கூறுகிறான்.

இதை விசாரிக்க ஆரம்பிக்கும் விஷாலுக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது. அதாவது, வின்சென்ட் அசோகன், போலீஸ் அதிகாரி சம்மந்தப்பட்ட தகவல்கள் கிடைக்கிறது.

இந்த சம்பவங்களுக்கு பின்னால் யார் இருக்கிறார்? அதன் பின்னணி என்ன? அதை எப்படி விஷால் துப்பறிந்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் விஷால் கணியன் பூங்குன்றன் என்ற தனியார் துப்பறிவாளராக நடித்திருக்கிறார். கேஸ் கிடைக்கலையே என்று ஏங்கும் இவருக்கு, சிறந்த கேஸ் கிடைத்தவுடன் நின்று நிதானமாக ஒவ்வொன்றாக துப்பறியும் காட்சிகளில் சிறப்பாக நடித்து அசத்தி இருக்கிறார். இதுவரை பார்த்திராத விஷாலை இப்படத்தில் பார்க்கலாம்.

விஷாலுக்கு அடுத்து படத்தில் அதிகம் கவர்வது வினய். ஸ்டைலிஷ் வில்லனாக நடித்து அப்லாஸ் வாங்கியிருக்கிறார். விஷால் கூடவே இருந்து அவருக்கு உதவும் பாத்திரமாக நடித்திருக்கிறார் பிரசன்னா. பிக்பாக்கெட் பெண்ணாக நடித்திருக்கிறார் நாயகி அனு இம்மானுவேல். விஷாலை கண்டாலே பயந்து நடுங்கும் காட்சியில் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். குறிப்பாக ஒரு பிக்பாக்கெட் காட்சியில் ரசிகர்களிடம் கைத்தட்டல் பெறுகிறார். வித்தியாசமான வேடம் ஏற்று நடித்திருக்கிறார் பாக்யராஜ். இறுதிக் காட்சியில் ரசிகர்களிடம் பரிதாபத்தை வாங்கிக்கொள்கிறார். ஸ்டைலிஷ் வில்லியாக வந்து அசத்தியிருக்கிறார் ஆண்ட்ரியா. சிம்ரனுக்கு கூடுதல் காட்சிகள் கொடுத்திருக்கலாம்.

துப்பறியும் கதையை எடுத்து அதை தனக்கே உரிய பாணியில் படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் மிஷ்கின். கமர்ஷியல் படத்திற்கு உண்டான காமெடி காட்சிகள் படத்தில் ஏதும் இல்லை. விறுவிறுப்பான திரைக்கதை, மிஷ்கினின் கேமரா கோணங்கள் ஆகியவை படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. விஷாலிடம் திறமையாக வேலை வாங்கியிருக்கிறார் இயக்குனர். விசாரணை காட்சிகளில் கூடுதல் சுவாரஸ்யம் இருந்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.

அரோல் கரோலியின் பின்னணி இசை படத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறது. கார்த்திக் வெங்கட்ராமனின் ஒளிப்பதிவு கதை ஓட்டத்திற்கு துணை நின்றிருக்கிறது.

மொத்தத்தில் ‘துப்பறிவாளன்’ துணிச்சலானவன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *