அல்சர் உள்ளவர்கள் அவசியம் தவிர்க்கவேண்டிய உணவுகள், பானங்கள்!

மாறிவரும் உணவு முறை நமக்கு நல்லதைச் செய்கிறதோ இல்லையோ, விதவிதமான நோய்களைக் நம்மிடம் சேர்க்கிறது. அவற்றில் முக்கியமான ஒன்று, `பெப்டிக் அல்சர்’ எனச் சொல்லப்படும் வயிற்றுப்புண்.

‘அனுபவித்தவர்களுக்குத்தான் அல்சரின் வேதனை புரியும்’. சாப்பிட வேண்டும் என ஆசை இருந்தாலும், சரியாகச் சாப்பிட முடியாது. வலி படுத்தி எடுத்துவிடும். இது உணவுக்குழாய், இரைப்பை மற்றும் சிறுகுடலின் உட்சுவரில் உருவாகும் ஒருவகைப் புண். இது பாதிக்கப்பட்டவரைப் பலவிதத் தொந்தரவுகளுக்கு ஆளாக்கும். அல்சர் வருவதற்கான அறிகுறிகள் தெரியும்போதே தடுக்கலாம்.

அல்சரால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த வகை உணவுகளைச் சாப்பிடலாம், எவற்றைச் சாப்பிடக் கூடாது என்பதைத் தெரிந்துவைத்திருக்க வேண்டும். உணவுப் பழக்கத்தில் கவனமாக இருந்தாலே அல்சர் பிரச்னையில் இருந்து எளிதாக விடுபட்டுவிடலாம். உணவுகளில் கவனமாக இருந்தால், செரிமானமின்மை, வாயுத்தொல்லை, வாந்தி எடுத்தல், உணவைப் பார்த்தாலே அருவருப்பாக உணர்தல் ஆகியவை தவிர்க்கப்படும். வயிற்றில் ஏற்படும் கடுமையான எரிச்சல் உணர்வையும் இதனால் தடுத்துவிடலாம். அல்சர் உள்ளவர்கள் அவசியம் தவிர்க்கவேண்டிய உணவுகள், பானங்கள் என்னென்ன?

தொடர்ந்து மதுப்பழக்கம் உள்ள ஒருவருக்கு, பலவகை நோய்களுடன் அல்சரும் வந்து சேரும். ஏற்கெனவே அல்சர் இருப்பவர்கள் மது இருக்கும் பக்கம் திரும்பிப் பார்க்கவே கூடாது. குடிப்பழக்கத்தால் நம் வயிற்றில் அமிலம் மேலும் மேலும் அதிகரிக்கத்தான் செய்யும்.

காரமான உணவுகள்

அல்சருக்கு ஆகவே ஆகாதது காரம். காரமான உணவுகளும் அதிக மசாலா சேர்த்த உணவுகளும் அமிலத்தின் அளவை அதிகரிக்கும். எதுக்களிப்பை ஏற்படுத்தும். அதனால் வயிற்றின் ஓரங்கள் எல்லாம் பாழாகும். ஏற்கெனவே அல்சர் இருப்பவர்களின் நிலை இன்னும் மோசமாக மாறிவிடும். எனவே, அதிகம் மிளகாய்த்தூள், மிளகாய் சேர்த்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

‘தொடர்ந்து காபி குடிப்பதாலும் பெப்டிக் அல்சர் ஏற்படும்’ என்கிறது நவீன மருத்துவம். காபிக்குப் பதிலாக, வயிற்றுக்கு இதம் தரும் மாதுளை ஜூஸ், ஆப்பிள் ஜூஸ் போன்ற வேறு ஏதேனும் பானங்களை அருந்தலாம். இவற்றால் வயிற்றுப் புண் ஆறவும் வாய்ப்புள்ளது.

சிவப்பு இறைச்சி

சிவப்பு இறைச்சி வயிற்றுப் புண்ணுக்கு பெரிய காரணமாக இருக்காது என்று பலரும் நினைக்கிறார்கள். அது தவறு. இந்த இறைச்சி, வயிற்று ஓரங்களைப் பழுதடையச் செய்யும். இதில் உள்ள அதிக அளவிலான புரதச்சத்தும் கொழுப்புச்சத்தும் செரிமானமாவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால் வயிற்றிலேயே அதிக நேரம் இறைச்சி உணவு தங்கிவிடும். இதனாலும் வயிற்றில் அமிலம் அதிகம் சுரக்க நேரிடும். இதுவும் அல்சரை அதிகரிக்கச் செய்யும்.

சோடாவிலும் குளிர்பானங்களிலும் இருக்கும் சிட்ரிக் அமிலம், வயிற்றின் அமிலத் தன்மையை அதிகரிக்கக்கூடியது. இது செரிமானத்திலும் பிரச்னையை ஏற்படுத்தும். அல்சர் இருப்பவர்கள் சோடாவையோ, குளிர்பானங்களையோ அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.

பால்

அல்சர் உள்ளவர்கள் பால் மற்றும் பால் உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. சிலர் பாலைக் குடித்தால் அல்சர் குணமாகும் என நினைக்கிறார்கள். ஆனால், பாலில் இருக்கும் புரதச்சத்தும் கொழுப்புச்சத்தும் வயிற்றுப் புண்ணுக்கு ஆபத்தைத்தான் ஏற்படுத்தும். பால், வயிற்றின் அமிலத் தன்மையை அதிகரிக்கச் செய்யும்.

அல்சர் உள்ளவர்கள் நேரத்துக்குச் சாப்பிடவேண்டியது அவசியம். நார்ச்சத்துள்ள காய்கறிகள், பழங்கள் செரிமானத்தை சீராக வைத்திருந்து, அல்சரில் இருந்து காக்கும். முட்டை, தயிர், மீன், பீன்ஸ் ஆகியவற்றை அதிகமாக உட்கொள்ளலாம். உணவில் புதினாவைச் சேர்த்துக்கொள்ளலாம். தேங்காய்ப்பால், மணத்தக்காளிக்கீரை ஆகியவை வயிற்றுப் புண்ணை ஆற்றும். தானியங்கள், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம். தேவையற்ற உணவுகளைத் தவிர்ப்பது விரைவில் அல்சர் பிரச்னையிலிருந்து மீள உதவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *