முக்கிய செய்திகள்
Home / சினிமா / விஜய் ஆண்டனியின் “எமன்” திரைவிமர்சனம்!

விஜய் ஆண்டனியின் “எமன்” திரைவிமர்சனம்!

c605

தமிழகத்தில் அரசியல் சூழலே  பரபரப்பான த்ரில்லர் படம் போல் அரங்கேறிக்கொண்டிருக்கையில் திரையில் ஒரு அரசியல் த்ரில்லர் படமாக வந்திருக்கும் ‘யமன்’ எப்படி இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

சிறு வயதிலேயே பொற்றோரை இழந்து விட்ட தமிழரசன்  (விஜய் ஆண்டனி) தனது தாத்தாவின் அறுவை சிகிச்சைக்குப் பணம் திரட்ட, தான் செய்யாத ஒரு குற்றத்தை செய்ததாக வாக்குமூலம் கொடுத்து சிறை செல்கிறான். அங்கு இரண்டு கள்ளக் கடத்தல் வியாபாரப் போட்டியாளர்களின் அறிமுகம் கிடைத்து அதன் மூலம் ஒரு வியபார-அரசியல் சூச்சிகளின் வலையில் சிக்குகிறான்.. அதன் வழியே முன்னால் எம்எல்ஏ கருணாகரன் (தியாகராஜன்) அறிமுகம் கிடைத்து அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமாகிறான் தமிழரசன்.

கருணாகரனுடன் இணக்கமாக இருக்கும் ஆளும் கட்சி அமைச்சர் (அருள் ஜோதி) மூலம் தமிழ்ச் செல்வனின் உயிருக்கும் அவனது தோழியான அஞ்சனா (மியா ஜார்ஜ்) என்ற சினிமா நடிகையின் பாதுகாப்புக்கும் ஆபத்து வருகிறது.

அந்த அமைச்சரிடமிருந்து தன்னையும், அஞ்சனாவையும் காப்பாற்றிக்கொள்ளும் தமிழரசன் அரசியலுக்குள் நுழைய முடிவு செய்து காய் நகர்த்தத் தொடர்கிறான்.

தனது அரசியல் அதிகாரக் கனவை பல தடைகளைக் கடந்து சூழ்ச்சிகளை உடைத்து எப்படி சாதிக்கிறான் என்பதே மீதிக் கதை.முதல் இருபது நிமிடங்கள் ஃபிளாஷ் பேக், சிறைக் காட்சிகள் ஆகியவற்றுக்குப் பிறகு, படம் அரசியல் காய் நகர்த்தல், சூழ்ச்சிகள் ஆகியவற்றுக்குள் நுழைந்த பின் சூடுபிடிக்கிறது. அரசியல் கட்சிகளில் அதிகாரப் போட்டி, அதற்காக கொடுக்கப்படும் உயிர்ப் பலிகள். கூட இருப்பவரே எந்த நேரமும் துரோகியாக மாறிவிடும் சாத்தியம் ஆகியவற்றைப் பட்டவர்த்தனமாகப் போட்டுடைக்கிறது ‘யமன்’.

அரசியல் சூழ்ச்சிக் காட்சிகள் சுவாரஸ்யமாகவும் ரசிக்கும்படியும் உள்ளன. குறிப்பாக இரண்டாம் பாதியில் அமைச்சரின் உதவியாளரான சார்லியை வைத்து ஆடப்படும் கேம் படத்தின் மிகச் சிறந்த பகுதியாக உள்ளது.பரபரப்பான இறுதி அரை மணிநேரக் காட்சிகளும் நம் கவனத்தைக் கட்டிப்போடுகின்றன.  இந்தக் காட்சிகளுக்கு இயக்குனர் ஜீவா சங்கரின் வசனங்கள் பெரிய பலம்.  ’மக்களும் அரசியல் செய்பவர்கள்தான்’, ’அரசியல்வாதிகளுக்கு அருகிலேயே விசுவாசமாக இருப்பவன்தான் எதிரி’ என்பதைப் போன்ற விஷயங்களை உணர்த்தும் வசனங்கள் கைதட்டல்களைப் பெறுகின்றன.

நாயகன் தனது தந்தையைக் கொன்றவரைப் பழிவாங்குகிறோம் என்று தெரியாமலே பழிவாங்கும் விதத்தில் திரைக்கதை அமைத்திருப்பதற்கு ஒரு சபாஷ் போடலாம்.

படம் குறிப்பாக முதல் பாதியில் மெதுவாகவே நகர்கிறது. படத்தி நீளமும் அதிகம். திரைக்கதையில் ஆர்ப்பரித்து ரசிக்க வைக்கும் சுவாரஸ்ய காட்சிகள் சில இடங்களில்  இருக்கின்றன. மற்ற காட்சிகளும் பெருமளவில் பார்வையாளரின் கவனத்தைத் தக்கவைக்கும் வகையிலேயே நகர்கின்றன. ஆனால் வலிந்து  திணிக்கப்பட்ட பாடல்ளும் நாயகன்-நாயகிக்கு இடையிலான காட்சிகளும் பொறுமையை சோதிக்கின்றன.

சாதாரண மனிதன் அரசியலுக்குள் நுழைவதற்கு எதிரான சுழ்ச்சிகளிலும் அதை முறியடிப்பதற்கான நாயகனின் சூழ்ச்சிகளையும் அசலாகவும் சுவாரஸ்யமாகவும் உருவாக்கியிருக்கும் இயக்குனர் காட்சிகளின் நம்பகத்தன்மைக்கு கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். ஆளும் கட்சி அமைச்சரை நாயகன் எதிர்த்து எளிதாக வெல்லும் காட்சிகளில் லாஜிக் மீறல்கள் அளவு கடக்கின்றன.

ஒரு கட்டத்துக்கு மேல் சாதாரண மனிதனாக இருக்கும் நாயகன் சூப்பர் ஹீரோ போல் ஆகிவிடுவது படத்துடனான ஒன்றுதலைக் குறைக்கிறது. இதுவரை கதையின் நாயகனாக நடித்துக்கொண்டிருந்த விஜய் ஆண்டனி சுப்பர் ஹீரோ அந்தஸ்னட்தை நோக்கி நகர்கிறாரோ என்று யோசிக்காமல் இருக்க முடியவில்லை. ’என் மேல கைவைச்சா காலி’ பாடல் வரிகள் அந்த எண்ணத்துக்கு வலுவூட்டுகின்றன.

விஜய் ஆண்டனி ஏற்ற வேடத்துக்குத் தேவையான நடிப்பைக் கச்சிதமாக வழங்கியிருக்கிறார். சண்டைக் காட்சிகளில் இன்னும் சிறப்பாகப் பொருந்துகிறார். எமோஷனல் காட்சிகளில் மட்டும் இன்னும் கொஞ்சம் பயிற்சி தேவை. மியா ஜார்ஜ்  அழகாக இருக்கிறார், நடிப்புக்குப் பெரிய வேலை இல்லை. .

தியாகராஜன் அரசியல் அதிகாரத்துக்காக திரைமறைவிலிருந்து வேலை செய்பவராக குறையற்ற நடிப்பைத் தந்திருக்கிறார். அமைச்சராக வரும் அருள் ஜோதி மனதில் பதியும் நடிப்பைத் தந்திருக்கிறார். அவருக்கான வசனங்களில் திருநெல்வேலி வட்டார வழக்கு தொடர்ச்சியாகவும் முழுமையாகவும் இருப்பது பாராட்டுக்குறியது. வட்டார வழக்குகளைப் பயன்படுத்தும் பெரும்பாலான படங்களில் அப்படி இருப்பதில்லை.

சார்லி, சங்கிலி முருகன், ‘லொள்ளு சபா’ சுவாமிநாதன், ஜி.மாரிமுத்து ஆகியோர் தங்கள் வேடங்களைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.

விஜய் ஆண்டனியின் இசையில் ‘என் மேல கைவச்சா காலி’ பாடலைத் தவிர வேறு எதுவும் நினைவில் நிற்கவில்லை. பின்னணி இசை திரைக்கதையின் திடீர் திருப்பங்களுக்குத் தோதாகப் பயணிக்கிறது.

இயக்குனர் ஜீவா சங்கரின் ஒளிப்பதிவு பிரமாதம். வீர செந்தில் ராஜின் படத்தொகுப்பு முதல் இருபது நிமிடங்களிலும் பாடல்களிலும் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம் என்ற குறையைத் தவிர மற்றபடி சிறப்பாகவே உள்ளது.

மொத்தத்தில் ’எமன்’, குறைகளை மறந்து ரசிக்கத் தக்க ஒரு  கமர்ஷியல் அரசியல் த்ரில்லர் என்று சொல்லலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top