சூப்பர் சிங்கர் தேர்வில் நடந்த மோசடி குறித்து விஜய் டிவி விளக்கம் அளித்துள்ளது!

c522

சூப்பர் சிங்கர் போட்டித் தேர்வில் சினிமாவில் பிரபலமாக இருப்பவர்கள் கலந்து கொள்ளத் தடை ஏதுமில்லை. எனவே விதி மீறல் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளது விஜய் டிவி. விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் 5 நிகழ்ச்சியில் முதலிடம் பிடித்து ரூ 75 லட்சம் பரிசு வென்ற ஆனந்த் அரவிந்தாக்ஷன் குறித்து பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

சென்ற வாரம் நடைபெற்ற சூப்பர் சிங்கர் 5-ன் இறுதிச்சுற்றில் பரீதா, ராஜ கணபதி, சியாத், ஆனந்த் அரவிந்தாக்‌ஷன், லட்சுமி ஆகிய ஐந்து பேர் போட்டியிட்டார்கள். தமிழ்த் திரையிசை உலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் ஆலுமா டோலுமா பாடலைப் பாடிய ராஜகணபதி தான் இந்தப் போட்டியை வெல்வார் என பலரும் எதிர்பார்த்தார்கள். ஏனெனில் அவருடைய இந்தப் பாடலுக்குத்தான் ரசிகர்களும் நடுவர்களும் அதிக வரவேற்பு அளித்தார்கள். ஆனால், ராஜ கணபதிக்கு நடுவர்களின் விருது மட்டுமே கிடைத்தது.

வாக்குகளின் அடிப்படையில் ஆனந்த் அரவிந்தாக்‌ஷன் முதலிடம் பிடித்தார். இரண்டாவது இடம் பரீதாவுக்குக் கிடைத்தது. லட்சுமி, சியாத் ஆகியோர் கடைசி இரு இடங்களைப் பிடித்தார்கள். முதலிடம் பிடித்த ஆனந்துக்கு ரூ. 75 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டுள்ளது. முதல் இரு இடங்களைப் பிடித்த ஆனந்த், பரீதாவுக்கு சினிமாவில் பாட வாய்ப்பளிப்பதாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உறுதி அளித்துள்ளார்.

c519இந்நிலையில் ஆனந்தின் தேர்வு குறித்து இணையத்தில் சர்ச்சை உருவாகியது. ஆனந்த் ஏற்கெனவே சுந்தரபாண்டியன், நீர்ப்பறவை, போன்ற 10 தமிழ்ப் படங்களில் பாடியுள்ளவர் என்கிற தகவல் அதில் வெளியானது. இதனையடுத்து, ஏற்கெனவே பின்னணிப் பாடகராக உள்ளவர் சூப்பர் சிங்கர் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது ஏன் என்கிற கேள்வியைப் பலரும் சமூக வலைத்தளங்களில் எழுப்பினார்கள்.

இந்த சர்ச்சை குறித்து விஜய் டிவியின் தலைமை நிர்வாகி பிரதீப் மில்ராய் பீட்டர், அளித்துள்ள விளக்கத்தில், “எங்களுடைய விதிமுறையில் எங்கேயும் திரைத்துறையிலிருந்தோ பாடகராக உள்ளவரோ சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்கக் கூடாது என்று கூறப்படவில்லை. ஆனந்த், ஆரம்பத்தில் அளித்த பேட்டியிலேயே தான் படங்களில் பாடியுள்ளதாகவும் ஆனால் தகுந்த வாய்ப்பு கிடைக்காததால் ஒரு மாற்றத்துக்காக சூப்பர் சிங்கரில் கலந்து கொள்வதாகவும் கூறியுள்ளார். திரைத்துறையில் உள்ளவர்கள் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக் கூடாது என்கிற விதிமுறை முதலில் இருந்தது உண்மைதான். ஆனால் அது சரியாக வராததால் அந்த விதிமுறையை நீக்கிவிட்டோம்,” என்று கூறியுள்ளார்.

இந்த விதிமுறை நீக்கப்பட்டதை வெளிப்படையாக அறிவித்திருந்தால், ஓரிரு பாடல்களோடு வீட்டில் முடங்கிக் கிடக்கும் நிறைய ‘சிங்கர்கள்’ பங்கேற்றிருப்பார்களே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *