பெண்கள் பேச்சால் அனல் பறந்த நீயா நானா – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய் டிவி!

c469

விஜய் டிவி நேற்று ஒளிபரப்பிய நீயா நானா நிகழ்ச்சி, மற்றொரு சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளது. ஏற்கனவே அஜித்-விஜய் ரசிகர்களை அமரச் செய்து மோதவிட்டு கடைசியில் அட்வைஸ் செய்து அனுப்பியதற்காக சோஷியல் மீடியாவில் வாங்கிக்கட்டிக்கொண்ட நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபி இந்தவார  நீயா நானாவுக்காக மேலும் கொஞ்சம் வாங்கிக்கொண்டார்.

ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் விவாத நிகழ்ச்சி நீயா நானா. கோபிநாத் தொகுத்து வழங்கிவருகிறார். பொங்கலை முன்னிட்டு, அஜித்-விஜய் ரசிகர்கள் நடுவேயான விவாத நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது நீயா நானா. சென்னை வெள்ளத்திற்கு பிறகு இணையதளங்களில் இவ்விரு ரசிகர்களும் அடித்துக்கொண்டது குறைந்திருந்த நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் அதிகரித்துவிட்டதாக ரசிகர்களே ஒப்புக்கொள்கிறார்கள்.

இந்நிலையில், நேற்றைய நிகழ்ச்சியின்போது, ‘பெண்கள் என்றாலே இப்படித்தான்’ என்று ஆண்கள் மத்தியில் உள்ள மனநிலையை பற்றி விவாதிக்கிறோம் என்று கூறினார் கோபிநாத். ஆரம்பத்தில் பெண்களை சீண்டும் வகையிலான சினிமா பாடல்களில் பிடித்தது எது என ஆண்களிடம் கேள்வி கேட்டார்.

கிளப்புல மப்புல சுத்துற பொம்பள… என்று ஒரு ஆல்பம் பாடலை ஒருவர் பாடி இதுதான் எனக்கு பிடிக்கிறது. பெண்கள் இப்போதெல்லாம் கெட்ட பழக்கத்திற்கு ஆளாகிவருவது அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார். இந்த பாயிண்ட்டை பிடித்து பெண்கள் பக்கமாக கொண்டு சென்றுவிட்டார் கோபி.

“கிளப்புல. மப்புல, சுத்துற பொம்பள என்ற பாட்டு என்னை புண்படுத்திவிட்டது சார். நான் கர்ச்சீப்பை கட்டிக்கொள்கிறேன், அல்லது வேறு எதை வேண்டும் என்றாலும் கட்டுகிறேன். அதெல்லாம் வேற யார் பிசினசும் கிடையாது. ஒரு பொண்ணா இருந்து நான் எனக்கு பிடிச்ச முடிவை எடுப்பேன். அது உங்கள் (ஆண்கள்) பிசினஸ் இல்லை” என்றார். அதற்கு பிறகு பேசியதுதான் இன்னும் சூடேற்றியது.

“நாங்க பப்புக்கு போனா உங்களுக்கு (ஆண்களுக்கு) என்ன பிரச்சினை? என் சேலைக்கும் இடுப்புக்கு நடுவேயான, 6 செமீ இடைவெளி கலாசாரம். ஆனால், சட்டை-பேண்ட் நடுவேயுள்ள 1 இஞ்ச் ஆபாசமா? நாங்க (பெண்கள்) தண்ணியடிச்சா உங்களுக்கு என்ன? உங்களுக்கு சரக்கு பற்றாக்குறையாகிவிடுமா?

நீங்க ஏன் தண்ணி அடிக்கிறீங்க (மது குடித்தல்). தண்டியடிக்கிறது உங்க சொத்தா. தண்ணியடிச்சா எனக்கும் மப்பு ஏறும், உங்களுக்கும் மப்பு ஏறும். உங்களுக்கு ஆதிக்க மனப்பாங்கு இருக்கு. பொண்ணுங்க எந்த விஷயம் பண்ணினாலும் அதை உங்களுக்கு காட்ட வேண்டும் என்பதற்காக செய்கிறார்கள் என நினைக்கிறீர்கள். என்கிட்ட 36 வகை லிப்ஸ்டிக் என்னிடம் உள்ளது. அதன் கலர் வேறுபாடு கூட தெரியாத ஆண்களிடம் காட்டுவதற்காக நாங்கள் அந்த மேக்கப்பை போடுவதில்லை. நாங்கள் மேக்கப்போடுவதற்கு பெயர் செல்ப்கேர்.

உங்கள் (ஆண்கள்) ரெஸ்பெக்டுக்காக யாரும் பிச்சை எடுக்கவில்லை. பொண்ணுங்க உங்க கட்டை விரலுக்கு கீழே இருக்கனும் என்று நினைக்கிறீர்கள். பெண் சுதந்திரமா மாறினா, உங்களுக்கு பிரச்சினையாகுது. பிடிவாதக்காரி, என்று சொல்கிறீர்கள்” என்று வரிசையாக கூறினார்.

ஷோவில் பேசிய பெரும்பான்மை பெண்களும், ஆண்கள் செய்வதை தாங்களும் செய்வதற்கு பெயர் பெண்ணியம் என்றனர். இறுதியில் கோபி பேசுகையில், அறிவுசார் மனிதர்கள், முற்போக்கு சிந்தனை உள்ளவர்களிடம் இந்த சிக்கல் உள்ளது. உயரிய கருத்தைதான் பேச வேண்டும் என்று நினைக்கிறார்கள். பெரும்பான்மை சமூகத்தோடு யார் உரையாடுவது என்று அந்த பெண்ணிடம் கேள்வி எழுப்பினார்.

இதனிடையே ஆண்கள் மது குடிப்பதை எதிர்த்து போராட்டம் நடக்கும் இந்த காலகட்டத்தில், பெண்ணியம் என்று நினைத்து ஆண் செய்வதையே செய்ய வைக்கும் செயலை நீயா நானா ஷோ ஆதரிப்பதாக சோஷியல் மீடியாக்களில் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுவருகின்றன. பெண்ணியம் என்பது என்ன என்பது குறித்து கெஸ்ட் யாரையும் கூப்பிட்டு விளக்கம் கொடுக்காமலே ஷோ முடிந்துவிட்டது. இதனால், சோஷியல் மீடியாவில் உள்ள, பெண்களும் கூட நீயா நானா ஷோவில் கூறப்பட்ட கருத்துக்களை சாடியுள்ளனர்.

ஆணுக்கு பெண் சமமானவள் என்று ஏமாற்ற, ஒரு கூட்டம் இருந்துகொண்டே இருக்கிறது இரண்டும் இரண்டு தனித்துவம் அவ்வளவுதான் என்று இந்த டிவிட்டர் பெண் பயனாளர் கூறியுள்ளார்.

இது போன்ற முடிவு இதுவரை வந்ததில்லை. நீயா நானாவில் எந்த ஒரு விளக்கத்தையும் தரவில்லை .பெண்ணிற்கு சம உரிமை உண்டு குடிப்பதற்கும் என்று தான் முடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *