ஆயுளை அழிக்கும் ஆயில்!!

oil

ஜீரோ கொலஸ்ட்ரால் என்பது தவறு. எல்லா எண்ணெயும் ஒன்று தான். சமையலில் எண்ணெய் சேர்ப்பது சுவைக்காக மட்டுமே என நம்மில் பலரும் நினைக்கிறோம். உணவில் எண்ணெய் காரணமாகவே கலோரி அதிகமாகிறது. அதிக கலோரி கொழுப்பாக மாறி வயிற்றில் படிகிறது. உடல் எடை கூடுவதற்கு முன் தொந்தி வரும். தொந்தியிலுள்ள கொழுப்பு கரைந்து கெட்ட கொழுப்பாக மாறுகிறது. அது ரத்தக் குழாயை அடைத்து மாரடைப்பு ஏற்படுத்துகிறது. வளரும் குழந்தைகளுக்கும், இளம் வயதினருக்கும் பாரபட்சம் பார்க்காமல் எண்ணெயில் வறுக்கப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது.

ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு 15 – 20 மி.லி., போன்று ஒரு மாதத்திற்கு அரை லிட்டர் தான் பயன்படுத்த வேண்டும். பொதுவாக ஒரு மனிதன் உடல் நலனுடன் இருக்க வேண்டும் என்றால் மாவுச் சத்து, புரதம், கொழுப்பு, விட்டமின் மற்றும் தாது உப்புகள் தேவை. இந்த ஐந்தும் அளவோடு இருந்தால் வளமோடு வாழலாம். இதில் கொழுப்பு சத்துதான் ஆயில். தோலின் பளபளப்பு, நோய் எதிர்ப்பு சக்திக்கு எண்ணெய் தேவைப்படுகிறது. அதிக எண்ணெய் இரத்த குழாய்களில் படிவதால் ரத்த குழாய் அடைப்பு ஏற்படுகிறது.

எண்ணெய் எப்படி கலோரியை அதிகப்படுத்துகிறது என்றால், 10 மி.லி., எண்ணெய் 90 கலோரி, ஒரு சாதா தோசை 80, ஒரு பூரி 260, வடை, பஜ்ஜி, சிப்ஸ் போன்றவை 200 – 250, பிரியாணியில் 6,550, ஒரு பிளேட் பிரியாணியில் 1,600 கலோரிகள் உள்ளது. ஒரு நாளைக்கு, ஒரு மனிதனுக்குத் தேவையான மொத்த கலோரியில், சுமார் 25-35 சதவிகிதம் ஆயில் மூலம் கிடைத்தால் போதும். இதுவே சர்க்கரை நோயாளிகள் என்றால் 25-30 சதவிகிதமும், இதய நோயாளிகள் என்றால் 25 சதவிகிதமும் இருந்தால் போதும்.

இன்று பல நோய்களுக்கு மூலகாரணம் எண்ணெய் கலந்த உணவுகள் தான். எல்லா எண்ணெயும் கொழுப்பு தான். நெய், வெண்ணெய், டால்டா, தேங்காய் எண்ணெய், பாமாயில் போன்ற எண்ணெய்கள் நேரடியாக கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தும். சூரியகாந்தி போன்ற மற்ற எண்ணெய்கள் ஈரல் வழியாக சென்று, கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தும். எனவே எதுவாயினும் அளவாக பயன்படுத்துதல் நல்லது நாம் சாப்பிடும் ஆயில் அளவு தேவைக்கு அதிகமாகும்போது கொலஸ்ட்ரால் என்கிற கெட்ட கொழுப்பாக மாறி ரத்தத்தில் சேர்கிறது. இது, ரத்தக் குழாயில் உறையும் அபாயம் இருக்கிறது. இதனால், ரத்த ஓட்டம் தடைபடும். அப்படி நடக்கும்போதுதான் மாரடைப்பு போன்ற சம்பவங்கள் ஏற்படுகின்றன.

அதிக எடை, அதிக கொலஸ்ட்ரால், கல்லீரல் பாதிப்பு, இதய நோய், இரத்த குழாய் அடைப்பு, சர்க்கரை நோய் ஆகியன ஏற்படுவதற்கு காரணம் எண்ணெய் கலந்த அதிக கலோரி உணவுகள் தான். பாரம்பரிய எண்ணெய்களான நல்லெண்ணெய், கடலெண்ணெய் போன்றவற்றை 15 – 20 மி.லி., வரை பயன்படுத்தலாம். திரும்ப திரும்ப சூடுபடுத்தப்பட்ட எண்ணெயில், சமைக்கப்பட்ட பலகாரங்கள் கேன்சரை ஏற்படுத்தும். 100 கலோரி சாப்பிட்டால், ஒரு கி. மீ., நடக்க வேண்டும். 500 கலோரி சாப்பிட்டால், 10 கி.மீ., நடக்க வேண்டும். எண்ணெய் பலகாரங்கள் மற்றும் இனிப்புகளில் கலோரி அதிகம் (400 – 600). எனவே நடை, உடற்பயிற்சி இல்லாமல் அதிக கலோரி உணவுகளை உண்பதை தவிர்க்க வேண்டும். அதிலும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ரத்தக் குழாயும், ரத்தமும் பாதித்து அடைப்பை ஏற்படுத்துகின்றன. சைவ உணவு உண்பவர்கள் தேங்காய் பால், தயிர் அதிகம் பயன்படுத்தக் கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *