விஜய் சேதுபதியின் ‘ஆரஞ்சு மிட்டாய்’ திரை விமர்சனம்!

c175

ரமேஷ் திலக்கும், ஆறுமுகம் பாலாவும் 108 ஆம்புலன்சில் பணிபுரிந்து வருகிறார்கள். ரமேஷ் திலக் அஷ்ரிதாவைக் காதலிக்கிறார். இவர்களது காதலுக்கு அஷ்ரிதாவின் தந்தை பச்சைக் கொடி காட்டுகிறார். ஆனால், ரமேஷ் திலக் செய்யும் வேலை பிடிக்காததால், அதை விட்டுவிட்டு தான் செய்துவரும் தொழிலில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து பணிபுரியுமாறு கூறுகிறார்.

ரமேஷ் திலக் தான் யோசித்து விட்டு சம்மதம் சொல்வதாக கூறிவிட்டு சென்றுவிடுகிறார். பின்னர், அகஸ்தியா பட்டி என்ற கிராமத்தில் ஒரு பெரியவருக்கு நெஞ்சு வலி என்று ரமேஷ் திலக், ஆறுமுகம் பாலா ஆகியோருக்கு அழைப்பு வருகிறது. இவர்கள் உடனே அந்த ஊருக்கு ஆம்புலன்சுடன் செல்கிறார்கள்.

அந்த ஊருக்குள் ஆம்புலன்ஸ் செல்ல வசதி இல்லாததால், தூரத்தில் வேனை நிறுத்திவிட்டு, நடந்தே செல்கிறார்கள். இவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் சென்று பார்த்தால், அங்கு விஜய் சேதுபதி வீட்டிலிருந்து வெளியே வருகிறார். அவரை அழைத்துக்கொண்டு ஆம்புலன்சுக்கு வருகிறார்கள். ஆம்புலன்சில் அவரை ஏற்றிக்கொண்டு மருத்துவமனை நோக்கி செல்கிறார்கள். செல்லும் வழியில் ரமேஷ் திலக் மற்றும் ஆறுமுகம் பாலாவை விஜய் சேதுபதி கேலி கிண்டல் செய்து வருகிறார். அவர்களுக்கும் வண்டி பஞ்சர் உள்ளிட்ட பல்வேறு இடையூறுகள் ஏற்படுகிறது.

ஒரு நோயாளி போல் இல்லாமல் இருக்கும் விஜய் சேதுபதி உண்மையாகவே ஒரு நோயாளிதானா? விஜய் சேதுபதியை ரமேஷ் திலக் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்களா? அதன் பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் விஜய் சேதுபதி, இந்த படத்தில் வயதான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருடைய நடிப்புக்கு தீனி போடும் படமாக அமைந்திருக்கிறது. நடு இரவில் ஆட்டோவில் போகும் போது திடீரென்று ஆட வேண்டும் என்று அடம் பிடித்து ரோட்டில் தையதக்கா என்று குதித்து நடனமாடும் போது சிரிக்க வைக்கிறார். ஒரு அப்பாவுக்கும் மகனுக்குமான உறவு எப்படி இருக்கும்? என்பதை சொல்லும்போது நெகிழ வைக்கிறார்.

ரமேஷ் திலக் சிறப்பாக நடித்திருக்கிறார். மற்ற படங்களை விட இப்படத்தில் ரமேஷ் திலக்கின் நடிப்பு கைத்தட்ட வைக்கிறது. ஆறுமுகம் பாலாவின் டயலாக் டெலிவரி, முகபாவங்கள், உடல்மொழி ஆகியவை ரசிக்க வைக்கின்றன.

எல்லாருக்கும் அப்பாவைப் பற்றிய கவலை இருக்கும். பாசமெல்லாம் அம்மாவிடம் மட்டும் தான் பகிர்வோம். ஆனால் அப்பா இல்லாதபோது வருத்தப்படுவோம். எனவே, அவர் இருக்கும்போதே அவரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை நாமே புரிந்து கொள்ளும் அளவுக்கு சொல்லியிருக்கிறார் இயக்குனர் பிஜு விஸ்வநாத்.

தனிமை ஒரு முதியவரை என்னவெல்லாம் செய்ய வைக்கும் என்பதையும், வயதானால் ஏற்படும் குழந்தைத்தனத்தையும் கண்முன்னே நிறுத்தியிருக்கிறார்கள்.

ஆனால் படம் மிகவும் மெதுவாக செல்கிறது. சுவாரஸ்யமான காட்சிகள் இல்லாதது வருத்தம். ஜஸ்டீன் பிரபாகரன் இசை படத்திற்கு பலமாக இருக்கிறது. பிஜு விஸ்வநாத்தின் ஒளிப்பதிவு அருமை.

மொத்தத்தில் ‘ஆரஞ்சு மிட்டாய்’ தித்திப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *