“வலியவன்” திரைவிமர்சனம்!

c197

எங்கேயும் எப்போது, இவன் வேற மாதிரி ஆகிய இரண்டு தொடர் வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர், இரண்டாவது முறையாக ஜெய்யுடன் இணைந்தவர், உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி காரணமாக பெரிய ஸ்டார்களின் படங்களே தள்ளி போன நிலையில் தைரியமாக படத்தை வெளியிட்ட இயக்குனர் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்த சரவணனின் ‘வலியவன்’, எதிர்பார்ப்பை நிறைவேற்றியதா என்பதை பார்ப்போம்.

ஜெய்யை முதன்முதலாக சப்வே ஒன்றில் சந்திக்கும் ஆண்ட்ரியா முன்பின் அறிமுகம் இல்லாத அவரிடம் ‘ஐ லவ் யூ’ என்று சொல்கிறார். இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த ஜெய், அதன்பின்னர் ஒருவாரமாக மீண்டும் ஆண்ட்ரியாவை சந்திக்க தனது நண்பர்களுடன் சேர்ந்து தேடுகிறார். ஆனால் ஆண்ட்ரியாவை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் மீண்டும் ஆண்ட்ரியாவே ஜெய்யை சந்திக்கிறார். அந்த சந்திப்பில் ஜெய் தன்னுடைய காதலை சொல்ல, நான் உன்னை காதலிக்க வேண்டுமானால், நான் சொல்லும் ஒருவனை நீ அடிக்க வேண்டும் என ஆண்ட்ரியா கண்டிஷன் போடுகிறார். ஜெய்யும் அதற்கு ஓகே சொல்ல, ஆண்ட்ரியா அடிக்க சொன்ன ஆள் சர்வதேச அளவில் குத்துச்சண்டையில் வெள்ளிப்பதக்கம் பெற்ற வீரர் என்பது ஜெய்க்கு தெரிய வருகிறது. ஆண்ட்ரியா ஏன் அவனை அடிக்க சொன்னார் என்பதற்கு ஒரு பெரிய சஸ்பென்ஸை வைத்துள்ளார் சரவணன். ஆண்ட்ரியாவின் சவாலை ஏற்று ஜெய் அந்த வீரரை அடித்தாரா? அதன் விளைவுகள் என்ன? என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.

முதலில் சரவணனின் பணிகள் குறித்து பார்ப்போம். சர்வதேச அளவில் புகழ்பெற்றவராக இருந்தாலும் ஒரு சின்ன விஷயத்தில் சகிப்புத்தன்மை இல்லாமல் நடந்து கொண்டால் ஒரு சாமானியனிடம் அசிங்கமாக தோற்க வேண்டிய நிலை ஏற்படும் என்ற நல்ல விஷயத்தை இந்த படத்தின் மூலம் மக்களுக்கு மெசேஜாக சொல்லியிருக்கின்றார். ஆனால் அதை சொன்ன விதம்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. படத்தின் முதல் பாதியில் கதை என்ன என்பதை ஒரு வரி கூட அவர் ரசிகர்களுக்கு சொல்லவில்லை. இரண்டாவது பாதியிலும் அரைமணி நேரம் கழித்துதான் கதையை ஆரம்பிக்கின்றார். அதிலும் ஆண்ட்ரியா சொல்லும் பிளாஷ்பேக் நமது பொறுமையின் எல்லையை மிகவும் சோதிக்கிறது. கடைசி அரைமணி நேரம் மிகச்சிறப்பாக செயல்பட்டிருக்கும் சரவணன், முதல்பாதியிலும் அதே கவனத்துடன் இருந்திருந்தால் படம் மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும்.

கோலிவுட் படவுலகிற்கு இன்னொரு ஆக்சன் ஹீரோ தயாராகிவிட்டார். முதல் பாதியில் செம பர்சனாலிட்டியாக, மார்க்கெட்டிங் எக்ஸிகியுட்டிவ் ஆக வரும் ஜெய், இரண்டாவது பாதியில் ஆக்சனுக்கு தாவுகிறார். இந்த படத்திற்காகவே சிக்ஸ்பேக் உடம்பை தயார் செய்து கேரக்டருக்காக ரொம்பவே உழைத்திருக்கின்றார் என்பது தெரிகிறது.

முதன்முதலாக சோலோ ஹீரோயினியாக நடித்துள்ள ஆண்ட்ரியா, கிளாமரான உடையில் இயல்பான நடிப்பை கொடுத்துள்ளார். மற்றபடி ஆண்ட்ரியாவின் நடிப்பை வெளிப்படுத்தும் அளவிற்கு அழுத்தமான காட்சிகள் இல்லாததால் அவரை குறை சொல்வது சரியாகாது என்றே தோன்றுகிறது.

ஜெய்யின் அப்பாவாக வரும் அழகம்பெருமாள், படத்தின் கதைக்கு ஒரு திருப்புமுனை கேரக்டர். ஆண்ட்ரியாவுடன் பணிபுரியும் ஒரு தோழராக அறிமுகமாகும் அவரது கேரக்டருக்கு பின்னாள் அப்படி ஒரு அழுத்தமான கேரக்டரை  இருப்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை. சர்வதேச அளவில் குத்துச்சண்டையில் வெள்ளிப்பதக்கம் பெற்றவராக நடித்திருக்கும் வில்லனின் நடிப்பு, மற்றும் பாலா, ஆகியோர்களின் நடிப்பும் ஓகே.

டி.இமானின் இசையில் பாடல்கள் கேட்கும்படியாக உள்ளது,. பின்னணி இசையிலும் அவர் குறை வைக்கவில்லை. தினேஷ் கிருஷ்ணனனின் ஒளிப்பதிவில் கிளைமாக்ஸ் குத்துச்சண்டை காட்சிகளும், பாடல் காட்சிகளும் அருமை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *