காதலித்திருக்கிறீர்களா? அப்படியென்றால் நிச்சயம் இந்த படத்தை உங்கள் வாழ்வில் மறக்க மாட்டீர்கள்.

நீங்கள் முரட்டுத்தனமாக வாழ்கிறீர்கள். உங்களை ஒருத்தி அணுவணுவாக மாற்றுகிறாள். இருவரும் உருகி உருகி காதலிக்கிறீர்கள். திருமணமும் நடக்கிறது. ஆனால் அந்த மகிழ்ச்சி…

கொஞ்சநாளிலே உங்கள் மனைவிக்கு அவள் வாழ்கையின் பாதி நினைவுகள் திடீரென்று மறந்து விடுகிறது. அல்சைமர் என்கிறார்கள். மீதி நினைவுகளும் கூடிய விரைவில் அழிந்துவிடும் என்கிறார்கள்.

குடும்ப வாழ்கை தலைகீழாக துயரம் மிகுந்ததாக மாறுகிறது. ஆனால் வாழ்க்கை அதன்பின்தான் இருக்கிறது என்றும் உங்களுக்குத் தெரியும். என்ன செய்வீர்கள்? இதுதான் கதை.

அவனுக்கு ஆரம்பத்தில் இது தெரியாது. அவளால் அவனிடம் இதை சொல்ல முடியாமல் வேதனையில் துடிக்கிறாள். பின்னர் அவனுக்கும் சந்தேகம் வருகிறது. மருத்துவமனை செல்கிறாள், கேட்டால் ஒன்றும் இல்லை என்கிறாள். எனவே அவனே அந்த மருத்துவரிடமே சென்று உண்மையை தெரிந்து கொள்கிறான்.

இது அவளுக்கு தெரியுமா என்கிறான். ஆம் என்கிறார் மருத்துவர். இதை அவளிடம் சொன்ன மருத்துவரிடம் அங்கேயே சண்டையிடுகிறான். பின்னர்தான் தன் சொந்த மனைவியை அதே நோய்க்கு பறிகொடுத்த கதையை மருத்துவர் அவனிடம் கூறி எல்லாவற்றிற்கும் தயராக இருக்கும்படி கூறுகிறார்.

இதற்கிடையில் அவளுக்கு சமீபத்திய நினைவுகள் மறக்க தொடங்குகின்றன. ஒரே அலுவகத்தில் வேலை பார்க்கும் முன்னாள் காதலனை பார்த்தாலே எரிந்துவிழும் அவள் திடீரென்று அவனிடம் முன்புபோல காதலுடன் பேசுகிறாள். இதை அவனும் பயன்படுத்திக்கொண்டு அவள் வீட்டுக்கே வந்து அவளுடன் தவறாக நடந்து கொள்ள முயற்சிக்கிறான்.

இதை பார்த்த கதாநாயகன் அவனுடன் சண்டை போடுகிறான். அவளோ கதாநாயகனிடமிருந்து முன்னாள் காதலனை காப்பாற்ற நினைக்கிறாள். அந்த இக்கட்டான நேரத்தில் வீட்டுக்கு வரும் அவளின் அப்பா, அம்மா என அனைவருக்கும் அப்போதுதான் அவளின் நோய் பற்றியே தெரிய வருகிறது.

அதன்பின் வரும் காட்சிகள் அனைத்தும் எப்படிபட்ட கல் நெஞ்சையும் கரைத்துவிடும்.

ஒரு கட்டத்தில் காதலி காதலனிடம் சொல்வாள். “எனக்கு சீக்கிரமே எல்லாம் மறந்துவிடும். என் நினைவுகள் அழிந்துவிடும். அதிலிருந்து நீயும் மறைந்து விடுவாய். நீ ஏன் என்னுடன் இருக்கிறாய் என்று எனக்கே தெரியாமல் போய்விடும். நானும்தான். உனக்கு நான் என்ன சொல்கிறேன் என புரிகிறதா? எனக்கு பயமா இருக்கிறது” என்று சொல்லி கதறி அழுவாள்.

அந்த நேரத்திலும் வரும் அழுகையை அடக்கிக்கொண்டு மெல்லிய புன்னகையுடன் காதலன் “நீ எதுக்கு பயப்படுற, உன் நினைவுகளெல்லாம் அழிந்துபோனாலும் நான் உன்னுடனே இருப்பேன். நான்தான் உன் நினைவுகள். நான்தான் உன் இதயம். புரிஞ்சுதா? அழாத”னு சொல்லிட்டு அவன் உடைந்து அழுவான்.

படத்தில் இந்த காட்சிக்கு கண்ணீர் சிந்தாதவர்கள் இருக்க முடியாது. நம் நெஞ்சமே அந்த காட்சியில் அடைத்து விடும். தொண்டை வரண்டு விடும். அப்படி ஒரு தத்ரூபமான காட்சி அது. இதுபோன்ற காட்சிகள் நாம் படம்தான் பார்க்கிறோமா இல்லை நமக்குதான் இதெல்லாம் நடக்கிறதா என வேறுபடுத்தி பார்க்க முடியாமல் ஆகிவிடும்.

நிஜ வாழ்கையில் அளவில்லாமல் காதலித்த காதலியை, மனைவியை இழந்தவர்கள் இந்த படத்தை ஒருவேளை பார்க்க நேரிட்டால் நிச்சயம் உடைந்து அழுது விடுவார்கள். அந்த பாதிப்பு நீண்ட நாள் அப்படியே அவர்களுக்குள் உறைந்துவிடும்.

ஒருகட்டத்தில் அவள் முன்னாள் காதலன் பெயரை வைத்து அவனை அழைத்து I LOVE U என்பாள். கொஞ்சநேரம் திகைத்து நின்றுவிட்டு சிரித்துக்கொண்டே பதிலுக்கு அவனும் Me Too என்று கூறிவிட்டு கதவை சாத்திவிட்டு அழும் காட்சி வார்தைகளால் வர்ணிக்க முடியாது. எந்த ஒரு காதல் கவிதையும் இந்த காட்சிக்கு ஈடுகொடுக்க முடியாது.

இதன்பின்னும் காதலன் எப்படி எப்படியோ அவளுக்கு ஆறுதல் சொல்வான். ஆனால் தன் நோயினால் காதலனுக்கு கஷ்டம் வந்துவிடக்கூடாது என்று தீர்க்கமாக முடிவெடுத்து கடிதம் எழுதி வைத்துவிட்டு எங்கோ சென்று விடுவாள்.

எங்கெங்கோ தேடியும் அவனால் அவளை கண்டுபிடிக்க முடியாது. அவளுடன் பழகிய நாட்களில் அவர்கள் சென்ற இடங்களுக்கெல்லாம் பித்து பிடித்ததுபோல் செல்வான். எப்படியும் இடையில் ஒருமுறையாவது பழைய நினைவுகள் வரும் என மருத்துவர் கூறி இருந்ததுதான் அவனுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை.

அதேபோல் ஒருமுறை சிறிதுநேரம் மட்டும் அவளுக்கு பழைய நினைவுகள் வருகிறது. காதலனுக்கு கடிதம் எழுதுகிறாள். அதை வைத்து அவளை பார்க்க அவள் தங்கி இருக்கும் காப்பகத்திற்கு செல்கிறான். அங்கு அனைத்துமே மறந்தவளாக அவள் இருக்கிறாள். அவன் யாரென்றும் தெரியவில்லை. அவள் யாரென்றும் அவளுக்கு தெரியவில்லை.

காப்பகத்தில் அனுமதி கேட்டுவிட்டு அவளை முதன்முதலில் அவர்கள் சந்தித்த இடத்திற்கு அழைத்து செல்கிறான். அங்கு அவள் அம்மா, அப்பா, தங்கை, கதாநாயகனின் அம்மா எல்லோரும் இருக்கிறார்கள். யாரையும் அவளால் அடையாளம் காண முடியவில்லை.

முதல் சந்திப்பில் எப்படி அவனிடமிருந்து கோக்கை பறித்து அவள் குடித்தாள் என்பதை நினைவுபடுத்தும் விதமாக அதே மாதிரி நடிக்கிறான். அவள் யோசிக்கிறாள்.

அவன் மனம் தளராமல் அவள் எத்தனை முறை மறந்தாலும் அவள் மறக்க மறக்க என் காதலை அவளிடம் திரும்பத் திரும்ப கூறுவேன் என்கிறான். படம் முடிகிறது.

காதலித்திருக்கிறீர்களா? அப்படியென்றால் நிச்சயம் இந்த படத்தை உங்கள் வாழ்வில் மறக்க மாட்டீர்கள்.

வாய்ப்பிருந்தால் பாருங்கள்.

A Moment to Remember (2004)

பாவெல் சக்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *